Sunday, October 21, 2012

தேத்தாகுடி



"ஆறு  மணிக்கெல்லாம்  கார்  வந்துடும்டா. நீ  பாட்டுக்கு  எப்போதும்  போல  எட்டு  மணி  வரைக்கும்  தூங்காத  என்ன?".”சரி சரி" என்று அவன்  சொன்ன அடுக்குத்தொடர்  முடித்து  வைத்தது  அவனுக்கும்  அவன்  அம்மாவுக்குமான  அன்றைய  உரையாடலை.


தூங்க  தயாரானான்  செல்போன் ,ஐபாட் ,ஹெட்செட் ,போர்வை ,தலையணை  எல்லாவற்றையும்  தயார்படுத்திக்கொண்டு. காதுகளை  ஹெட்செட் மூட, கண்களை  இமைகள் மூட  தூங்க தொடங்கினான்.


விடிந்தது. வாசலில்  வந்து  நின்றது  வெள்ளை  நிற  அம்பாஸ்டர். ஏறி உட்கார்ந்துகொண்டான் " இதை  விட்டா வேற  காரே  கிடைக்காதா  இந்த  ஊர்ல" என்று  முணுமுணுத்துக்கொண்டே .டிரைவரும்  அப்பாவும்  முன் சீட்டில்  அமர  அம்மாவும்  மகனும்  பின்சீட்டில்  வசதியாக  அமர்ந்துகொண்டனர்.


குண்டும்  குழியுமான  சாலைகளையும், ஒலி  எழுப்பியும்  வழிவிடா  வாகனங்களையும்  திட்டிக்கொண்டே  நகர்ந்தன  அப்பாவுக்கும்  டிரைவருக்குமான  முதல்  சில  நிமிடங்கள் .அம்மாவும்  மகனும்  தன்  பக்கம்  இருக்கும்  ஜன்னலுக்கு  தன்  கண்களையும்  கவனங்களையும்  திருப்பிகொண்டனர். வேகம்  பிடித்தது  வண்டி. புளியமரங்களெல்லாம்  பின்நோக்கி  பாய்ந்தன .புளியமரத்துக்கு  பின்னால்  சற்று  தொலைவில்  சோளக்கொல்லை  பொம்மையும்  , அதன்  பாதுகாப்பில்  வளரும்  வயல்களும்  அவனை  ஈர்த்தன. அவன்  கண்களை  கட்டி  போட்டன. ஏழு  வருட  அமெரிக்க வாழ்க்கை  அவனை  இப்படி  வெறித்து  பார்க்க  வைத்தது.

அவன்  பிளஸ்-2  முடித்த  கையோடு  அவனை  அமெரிக்காவில் இருக்கும்
 அவன்  அக்கா  வீட்டிற்கு  அனுப்பி  வைத்துவிட்டனர்.  அங்கு  அவன்  இதையெல்லாம்  கண்டதில்லை.அவன்  பார்த்ததெல்லாம்  வானுயர  கட்டிடங்களும்  அதில்  வாழும்  எந்திர  மனிதர்களும்தான்.


நேரம்  நகர்த்திக்கொண்டே போனது  பொழுதுகளை. எட்டு  மணியை  நெருங்கியவுடன்  வயிற்றுக்கு  பசிக்கும்  என்பதை  புரிந்துகொண்டு ஹோட்டல்களை  மட்டுமே  காட்டின  கண்கள். அதில் "உயர்தர"  என்ற அடைமொழியை  தேடி  அலைந்தது  கௌரவம். மூக்கு  வழிகாட்ட, கடைக்குள் அழைத்து  சென்றது  கால்கள் .காலை  உணவை  திருப்தியாக  முடித்து  வைக்க  இரண்டு  பூரியும்  ஒரு  தோசையும்  தேவைப்பட்டது .அப்பாவிற்கும்  டிரைவருக்கும்  மட்டும்  கூடுதலாக  ஒரு  காப்பி.


மீண்டும்  தொடங்கின  பயண  நிமிடங்கள். சவுக்ககொல்லைகள் சாட்சி சொன்னது  வேதாரண்யம்  வட்டம்  நெருங்கியதை  .ஓட்டுகட்டடத்தை  சுட்டிகாட்டி  " நான் படித்த பள்ளி"  என்று  தன்  நினைவுகளை புதுப்பித்துகொண்டாள், அம்மா.சற்று  நேரத்தில்  ஆளில்லா  லெவல் கிராசிங்கை  கடந்தது கார்." இப்போ  போனிச்சில்ல  இதான் 'வெள்ளகேட்'.முன்னாடி வேதாரண்யம்  பஸ்  எல்லாம்  இங்கேயே திருப்பிடுவான் .  நாம  இங்கேந்து  ஆத்தா  வீடு  வரைக்கும்  நடந்தே போவோம்.இப்போ  எல்லாம்  மாறிடுச்சு" என்று  சலித்துகொண்டாள், இந்த மாற்றங்கள்  எல்லாம் பிடிக்காதது போல்.


கோரைப்புல்லை  பிய்த்து  மண்ணில்  கோடு  போட்டுக்கொண்டே போவது ,ஆறு  என்ற  அடையாளத்திற்கு  ஒட்டிகொண்டிருக்கும்  தண்ணீரில்  அதில் மேயும்  நாரையை  கைகாட்டி  "அம்மா  கொக்கு"  என  அடையாளம்  காட்டியது எல்லாம்  கொஞ்சம்  கொஞ்சம்  நினைவிற்கு  வர  தொடங்கியது.


"தேத்தாகுடி  ஊராட்சி  ஒன்றியம்  தங்களை.."திக்கித்திணறி  படித்து,  பின்பு வியூகத்தில்  சேர்த்துகொண்டான் " அன்புடன்  வரவேற்கிறது" என்பதை .வளைவுகள்  மிகுந்தது. சாலை  குறுகியது. வேகம்  குறைந்தது. ஒரு  இனம் புரியாத  சந்தோஷம்  தொற்றிகொண்டது . நெருங்கிவிட்டதை  அது நிலைப்படுத்தியது.


மாவடிவாய்க்கா, முனியங்கோயில், குழிச்சோழி  முந்திரிதோப்பு, குண்டுமணி கிணறு, சிவங்கோயில், திருக்குளம், சோடா  கம்பெனி,பெரியப்பா  கடை எல்லாம்  கண்  முன்னே  கடந்து  சென்றது."அந்த  மாமர  ஓரமா  கொஞ்சம் அனச்சி  நிப்பாட்டிகோங்க  தம்பி" என அப்பா  சொல்ல  அதை  அப்படியே செய்தார்  டிரைவர். வந்துவிட்டோமா  என  எட்டிபார்ப்பதர்க்குள்  வந்து நின்றுவிட்டது  கார்.

கால்கள்  சந்தோஷமாக  தரை  எடுத்து  வைத்தது. ஓடி  வந்து  வரவேற்றனர் பக்கத்து  வீட்டு  குழந்தைகள் ,காரை . சற்றுதூரத்தில் ,புண்ணாக்கை  கரைத்து கொண்டிருந்தவள்  சத்தம்  கேட்டவுடன்   சற்று  தலையை  தூக்கி பார்த்தாள் ,அவன் பாட்டி .இமைகள்  சுருங்க ,கைகள்  கண்களுக்கு  மேல்  கூடாரம்  போட,  அவர்களை  உற்று  நோக்க  தொடங்கினாள். அடையாளம்  கண்டுகொண்டதை அவள்  இதழ்கள்  விரிந்து , கரை  படிந்த  பற்கள்  வெளியே  தெரிந்து ,காட்டிகொடுத்தன. கையை  தன்  சேலை  முந்தானையில் துடைத்துக்கொண்டு  சந்தோஷத்தின்  உச்சத்தில்  வேகமாக  நடந்து வந்தாள் ."ஆச்சி  கண்ணு  வாடாவாடா" என  அம்மாவை  அணைத்துக்கொண்டு," வாங்க தம்பி  வாங்க  வாங்க  உட்காருங்க" என  அப்பாவை வரவேற்று ,"கண்ணம்புள்ள  தான  இது!  எம்புட்டு  வளந்துட்டான்!"  என  முத்தமிட்டு பரிசளித்தாள் , சந்தோஷத்தையும்  வெற்றிலைபாக்கு  வாசத்தையும்.

தாத்தா ,மாமா ,சித்தி ,சித்தப்பா ,அத்தை ,அத்தை மகள்  என  எல்லோரும் ஒன்று  கூடிவிட்டனர். பழைய வீடெல்லாம் இடிக்கப்பட்டுவிட்டது . புது வீடு டைல்ஸ்  எல்லாம்  போட்டு  பளபளத்தது. பத்தாயத்தை  திறந்து திறந்து விளையாண்டது , எலிப்பொறியில்  உள்ள  தேங்காவை  திருடி  தின்றது , கயித்து  கட்டிலில்  உட்கார்ந்துகொண்டு  ஒளியும்
ஒலியும்  பார்த்தது , தொலைத்த  எல்லாம்  நினைவுக்கு  வந்தன நினைவுகளாய்.


பேசிக்கொண்டு  இருந்ததில்  மறந்தது  பொழுது . நாட்டுகோழி  வாசம் வந்ததும்தான்  பசித்ததை  உணர்ந்தது  வயிறு.
செந்நிற  பிளாஸ்டிக்  டைனிங்  டேபிளில்  தலைவாழை  இலையில்  சுட  சுட சுடுசோறு பரிமாறப்பட்டது. டைனிங்  டேபிளும்  தலைவாழை  இலையும் அவனை  அந்நியபடுத்தியது. எதையோ  தொலைத்ததை  எண்ணி தேடத்தொடங்கியது  மனசு. மெல்ல விழுங்கிவிட்டான்   உண்டதையும் நினைத்ததையும்.

பொழுது  சாய்ந்தது. கிளம்பலாம்  என  முடிவெடுத்தார்கள்  அப்பாவும் அம்மாவும் ."கண்ணம்புள்ள  இங்க  வாயேன்  ஒரு  நிமிஷம் " என  நைசாக பாட்டி  அழைத்து , "இத புடி "  என  கையில்  நுழுந்தினாள்  அவள் சுருக்கு பையில்  இருந்த  கசங்கிய  ஒரு  1௦௦  ருபாய்  நோட்டை ."அம்மாட்ட சொல்லிடாத!"  என  சொல்லி   அவள்  கொடுக்கையில்  வர்ணிக்கமுடியாத ஒரு  விசித்திர  உணர்வு   அவன்  இதயத்தில்  நிலவியது .வலி,  சந்தோஷம்  என  எப்படி  வேண்டுமென்றாலும்  அதற்கு  பெயர்  சூட்டி  கொள்ளலாம். வழி அனுப்ப மனமின்றி  வேறு  வழியுமின்றி  வழி  அனுப்பி  வைத்தார்கள் எல்லோரும்.

டிரைவருடன்  சேர்த்து  நால்வரையும்  ஏற்றிக்கொண்டது  கார். கடைசிவரை அவன்  சொல்லவே  இல்லை." அடுத்த வாட்டி வரும்போது  சமய கொட்டாய்ல  உட்காரவச்சி  தூக்குசட்டில  உள்ள  பழயசோத்துல  அரை வெங்கயாத்த  வச்சி  உன்  கையால  ஒருவாய்  ஊட்டி  விடு  ஆத்தா  அது போதும்  எனக்கு"  என்பதை..

கார்  வந்த  பாதையிலே  திரும்பி  சென்றது , சற்று வேகமாக...