Thursday, January 2, 2014

Trek 2 Thada.

தடா..
என்ன இது ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சமா,வழக்கொழிந்து போன ஒரு தடை சட்டமா என்றெல்லாம் யோசிக்க வைக்கும் இது,தன் வல்லின பெயருக்கு சுத்தமாய் சம்பந்த இல்லாத ஒரு வசீகரமான சுற்றுலா தலம்.

நம் பெற்றோர்களை,நம்மை,நம் குழந்தைகளை ஒரு இயற்க்கை காட்சி வரைய சொன்னால் வரையப்படும் அந்த இரண்டு மலைகள் அதனூடே உதிக்கும் சூரியும்,அந்த மலைகளில் வழியும் அருவி,அந்த மலையடிவாரத்தில் வழிந்தோடும் சிறு ஓடை இது தான் தடாவின் டிஸ்க்ரிப்ஷன்.

மலை இல்லாத,மலையை தொட்டு கூட பார்த்திராத ஒரு மனிதனுக்கு வரும் மலை ஏறும் ஆசைதான் எனக்கும்.மலை ஏறுவதற்கு பெயர் ட்ரெக்கிங் என்றும்,தன் ட்ரெக்கிங் அனுபவங்கள் பற்றியும் பலர் கூற கேட்டு,உள்ள இருந்த ஆசை,வெறியாக பரிணாம வளர்ச்சி பெற்று வெறியாட்டம் போட்டது.

தேர்வை தொடர்ந்து தொடங்க உள்ளது விடுமுறை.ஊருக்கு போகும்முன் தடா போய்விட்டு போனால் என்ன என்று எவனோ கொளுத்தி போட்ட நெருப்பு ஹாஸ்டல்தீயாக பரவியது.

அய்..ட்ரெக்கிங் ட்ரெக்கிங் என பலர் கனவு காண நாங்க களம் இறங்கினோம்.சாரி.ஏறினோம்.

காலில் ஷூவையும் முதுகில் பேக்கையும் மூலையில் கற்பனையும் நெஞ்சு நிறைய ஆசைகளையும் சுமந்துகொண்டு தயாரானோம் தடாவை நோக்கி.

அது ஒரு மழைகாலம்.
அன்று ஒரு மழைகாலை.
வருணபகவான் வரவேற்றார் பூத்தூரல்களை தூவி.

நல்லபடியா போய்விட்டு வரணும் என்று சிலர் வீட்டிலும் நல்லபடியா தேர்வு எழுதணும் என சிலர் வீட்டிலும் பிரார்த்திக்கப்பட்டது.

செங்குன்றம்,கும்முடிபூண்டி எல்லாம் வருக வருக என வரவேற்று,நன்றி மீண்டும் வருக என வழி அனுப்பி வைத்தது.
அதோ தடா.எங்களை தடாவும் வரவேற்கிறது.தெலுங்கில்.அன்று தெலுங்கு எங்கள் தாய் மொழியாய் மாறி போனது.

காலை உணவு கட கடவென உள்ளே சென்றது.அடுத்து,அருவிக்கு செல்வது எப்படி என்ற கேள்விக்கு விடைதான்.விசாரித்து புடித்தோம் ஒரு ஷேர் ஆட்டோவை.(ஆக்சுவல்லி அவங்க தான் எங்கள புடிச்சாங்க).500 ரூபாய்க்கு பேரம் பேசப்பட்டது தமிழும் தெலுங்கும் கலந்த ஒரு ஆங்கிலத்தில்.

எனக்கு முன் சீட்டு இருக்கை,டிரைவருக்கு அருகில்.
டிரைவருடன் ஏதேதோ உரையாடல். அது என்ன இது என்ன என்ன என்ன என கேள்வி கனிகளை தொடுத்துக்கொண்டே இருந்தேன்.
வழியில் ஒரு பிரம்மாண்ட மாளிகை.
வியந்து போனேன்.
வாயும் பிளந்தேன்.
வாய் வழியே சென்ற வாடை காற்று அதை ஊர்ஜிதபடுத்தியது.

ஒரு சாமியாருடைய கோட்டை.
நம்ப முடியவில்லை.
உங்கள் நித்தியானந்த மாறி இவரும் போலி சாமியார் தான்.
நம்ப முடிகிறது..

மலை என் கண்ணில் தென்பட தொடங்கியது.
மாப்ள அங்க பார் என மலையை சுட்டிக்காட்டி பெருமிதபட்டுக்கொண்டேன், ஏதோ அது என் சொந்த மலை போல.

செக்குரிட்டி ட்ரிங்க்ஸ் இருப்பான்னு கேப்பாங்க,கேமராக்கு எக்ஸ்ட்ரா காசு கேட்பாங்க அதனால ஏதும் இல்லன்னு சொல்லிடுங்கன்னு சொல்லி இறக்கிவிட்டு போன் நம்பர் கொடுத்து,முடிந்தவுடன் கால் பண்ணுங்க வருகிறேன் என்று சென்றுவிட்டார் அந்த டிரைவர்.

செக்குரிட்டி அதே போல் கேமரா இருக்கா என்று கேட்டார்கள்.இல்லை என்று கை அசைத்துவிட்டோம்.
பொய் சொல்வது தான் கை வந்த கலையாச்சே.

அடுத்து..
ராஜ நடை.
இன்று தடா எங்களுக்கு சொந்தம்.

பத்து பேர்.
கர்வம்.
செருக்கு.
திமிரு.
ஹாரன் சத்தம்??????
திரும்பி பார்த்தால் ஒரு டூரிஸ்ட் பஸ் நிறைய இளைஞர்கள் ஆர்ப்பரித்துக்கொண்டு போனார்கள்.
பரவாயில்லை.
தடா எங்களுக்கும் சொந்தம் தான் போங்க..

மேலே மழை.
எதிரே மலை.
அந்த மலையில்  சூழ்ந்திருக்கும் பனி மூட்டம்.
தூரத்தில் அருவி சத்தம்.
இரண்டு பக்கமும் காட்டு மரங்கள்.
நடுவே சின்ன வழித்தடம்.
வழித்தடத்தில் நான்.
அருகில் நண்பன்.
சொர்க்கம்.

இதோ அதோ என இழுத்துக்கொண்டு போனது அருவி.
என்னமா அங்க சத்தம்.
அருவியா?
இல்லை
அருவியிலிருந்து வழிந்தோடும் ஓடை.

அங்கே நிகழ்ந்தது மாற்றம்.
சட்டை பனியனாக.
பேன்ட் ட்ராயராக.
இளைஞன் குழந்தையாக.
எஜமானை கண்ட நாய்க்குட்டி போல சந்தோஷம் துள்ளி விளையாடியது.நாங்களும் துள்ளி விளையாட தொடங்கி விட்டோம் அந்த தண்ணீரில்.

நாங்கள் குளித்துகொண்டிருந்த தருணத்தில் இன்னொரு க்ரூப் எங்களை கடந்து சென்றது சற்று ஏளன பார்வையுடன்.
போதும்டா வாங்க அருவிக்கு போகலாம் என்று முடிவெடுக்கப்பட்டது ஒரு மனதாக.

பாதைகள் குறுகியது.
இரண்டுபுறங்களும் உள்ள மரங்களும் எங்களை தொட்டு பார்த்துக்கொண்டே வந்தன.ஒரு இடத்தில் எங்களை முற்றுகையிட்டன.அதை எப்படியோ கடந்து சென்றால் அடுத்து பாறைகள்.அதன் மேல் அதன் இடையில் அதன் கிழ் என தண்ணீர் தழுவி ஓடிக்கொண்டிருந்தது.

இதுதான் மெயின் பிச்சர் என்றது ஒரு அசரீரி.
இடையே ஒரு ரம்மியமான இடம்.
அங்க நின்னு போஸ் கொடுக்கலாம்.
ஃபேஸ்புக்கில் போடலாம்.
லைக் அள்ளலாம்.
அந்த சுருட்டமுடி  ஸக்கர்பெர்க் விரித்த வலை.
சுற்றுலாதலம் அவன் வலைதலமாகி போனது.

பாறைகள் வழுக்கின.
கால்கள் தவறின.
சிலருக்கு காயங்கள்.
சிலருக்கு கீறல்கள்.
“அருவி பக்கம்தாண்டா.வா போகலாம்.வாஎங்கும் ஆறுதல்கள்,அடிபடாத தேகங்களுக்கு சொந்தகாரர்களிடமிருந்து.
நமக்கு நடக்கும் வரை ஏதும் நம்மை பாதிக்கபோவதில்லையே.

ஓர் பெரிய பாறை.
குனிந்து பார்க்கையில் கொட்டிகிடந்தது தண்ணீர்.
நிமிர்ந்து பார்க்கையில் கொட்டிக்கொண்டிருந்தது தண்ணீர்.
ஆம் அருவியே தான்.
இந்த முறையும் நான்தான்.மாப்ள அங்க பார்.

நீச்சல் தெரிந்தவர்கள் நீந்தியும்,தெரியாதவர்கள் ஓரத்தில் நடந்தும் வந்து  அருவி சாரலை சுவாசித்துக்கொண்டிருந்தோம்.
நாங்கள் நிற்பதை கண்ட அந்த க்ரூப் நீங்கள் குளிங்கள் என எங்களுக்கு வழி விட்டு இறங்கி நின்றனர்.
முன்பு சிரித்தது ஏளன சிரிப்பு அல்ல பாசமான சிரிப்பு என சமாதானம் சொல்லிக்கொண்டது பைத்தியக்கார மனசு.

அருவியில் குளிக்கையில் எவனோ முதுகில் அடிப்பது போலவும் தலையில் கொட்டுவது போலவும் தோன்றும்.அதும் முதல் தடவை குளிப்பவனுக்கு.(அருவியில்).

தோள்களில் நண்பனின் கைகள்.
கட்டிபிடித்துகொன்டு கொண்டாட்டம்.
கங்கம் ஸ்டையில் டான்ஸ்கள்.
பி.எஸ்.ஒய் கூட இவ்வளவு சந்தோஷமாக ஆடிருக்க மாட்டார்.
மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் ,என்ன யோசிப்பார்கள் என எதையும் யோசிக்கவில்லை.எனக்காக வாழ்ந்த தருணங்களில் அதும் ஒன்று.

ஒரு 20 நிமிடங்கள் எங்களையே மறந்து விட்டோம்.சந்தோஷம் தான் பெரிய போதை என்பதை உணர வைத்த போதிமரம் அது.

யாரோ போகலாம் என சொன்னான்.வேறு வழியின்றி சரி என்று முடிவு எடுக்கப்பட்டது.இம்முறை முடிவெடுத்தது என்னவோ மூளை தான்.மனசு அல்ல.

நானும் அருவியில்,மலையில் கால்தடம் பதித்துவிட்டேன் என்று பெருமிதத்தோடு நடக்கையில் தெரிந்தது என் கால் தடம் ரத்தத்தில் பதிந்திருந்ததை.

கண்ணாடி கிழித்திருக்கும் போல.ரத்தம் நிக்காமல் வந்தது.
யாரிடமும் சொல்லி யாரையும் கஷ்டப்படுத்த வேண்டாம் என்று மூடி மறைக்கப்பட்டது காயமும் விஷயமும்.

ஆனால் அது சந்தோஷத்தை எந்த விதத்திலும் குறைக்கவில்லை.அது வலி.வேற டிபார்ட்மெண்ட்.

விஸ்கி பாட்டில் துகள்களால் விஸ்கி விஸ்கி நடக்கிறாய் என சொல்லி சிரித்துக்கொண்டார் என்னுள் இருக்கும் மிஸ்டர் கவிஞர்.

ஆனால் ரத்தம் கசிய கசிய ரகசியமும் கசிந்துவிட்டது.
என் பேக்கைகூட என்னை சுமக்கவிடவில்லை என் நண்பர்கள்.
சுமை குறைந்த சந்தோஷத்தில்
ஜாலி என்றது உடல்.
நோயாளி என்றது மனம்.

திரும்பி ஒரு முறை இறுதியாக பார்த்துக்கொண்டோம்.
தடா.
வலிய வார்த்தை தான்.

ஆட்டோ அணைத்துக்கொண்டது அனைவரையும்.எனக்கு அதே டிரைவரின் அருகில் இருக்கை.இந்த முறை அவர் அதிகமாக கேள்வி கேட்டுக்கொண்டு வந்தார்.மலை எப்படி இருந்தது,அருவி எப்படி இருந்தது எப்படி எப்படி எப்படி...

ஒரு தெலுங்கு வாசனை வீசுனிச்சி அவர் பேச்சுல.ஏனோ அது முன்னாடி வீசல.

அந்த பிரமாண்ட கோட்டை வாசலில் நின்று ஃபோட்டோ எடுத்துக்கொண்டோம்.ஒரு பேச்சுக்கு அவரையும் அழைத்தோம்.மறுத்துவிட்டார்.ஃபேஸ்புக் அக்கவுண்ட் இல்லை போலும்.

பின்பு பஸ் ஏறி இடம் பிடித்தோம்.எனக்கு பிடித்து கொடுத்தார்கள்.எனக்கே முன்னுரிமை அளிக்கப்பட்டது.தலையை தூக்கி ஊனமுற்றோர் இருக்கையா என ஒரு முறை பார்த்துகொண்டேன்.

எனக்கு பாதத்தில் கீறல்.ஒருத்தனுக்கு கட்டை விரலில் வெட்டு.இன்னொருவனுக்கு கண்ணாடி காணாமல் போனது.இன்னொருவனுக்கு காய்ச்சல்.இதெல்லாம் அங்கு போகமால் வீட்டில் சன் ம்யூஸிக் பார்த்துகொண்டிருந்தால் நிச்சயம் நிகழ்ந்திருக்காது தான்.

ஆனால் டைரியில் சன் ம்யூஸிக் என ஒரு வரியில் எழுதுவதை விட தடா என இத்தனை வரிகளில் எழுதுவே சந்தோஷப்படுகிறேன்.

மறுநாள் அம்மா ஜூஸ் போட்டு கொடுத்தார்கள்.சோபாவில் படுத்துக்கொண்டு சன் ம்யூஸிக் பார்த்துக்கொண்டிருக்கையில்
அடுத்து நாம் பார்க்க போற பாட்டு இந்தியன் படத்திலிருந்து

"அக்கடான்னு நானும் உடை போட்டா துக்கடான்னு நீயும் எடை போட்டா..தடா..உனக்கு தடா..."

Thursday, June 27, 2013

ஒரு ராட்சஸ பல்லி

"அய்யோ..என் மகன கொண்டுபோய் இப்புடி நடபொணமா போட்டுட்டாளே.நீ பாழ்மனையா போய்டுவடி.நாசமா போய்டுவடி.புழுத்துப்போய் தாண்டி செத்து போவ.அய்யோ அய்யோ"னு மாருல  அடிச்சிக்கிட்டு அழுவுறா ஆத்தாகாரி.

பொறடி பொசுங்கன வாட பொரட்டுது வயிர.ஒடம்பு எரிஞ்சி பிளாஸ்டிக்கா வெந்து கெடக்குது வாழை எலையில.எமனே எரக்கப்பட்டு எரஞ்சிட்டு  போய்ட்டான் போல.

மறுபடியும் எந்த சாமிட்டயோ உசுர இரவல் வாங்கி வந்து கண்ண தொறந்து பாத்தான்.கண்ணோட சேத்து கண்ணுத்தண்ணியையும் தொறந்திருப்பான் போல.எரிஞ்சி முடிச்ச அப்பறம் அனைக்கிது கண்ணீரு.

எரியுதுன்னு அழுதானா இல்ல ஏன்முழுசா எரியலன்னு அழுதானானு அங்க உள்ள  யாருக்கும் புடிபடல.

கண்ணு தொறந்த கணவன பாக்க தவிக்கிது உசுரு.“நீ பக்கத்ல வராதடி.எரிஞ்சும் சாகலன்னு இப்போ அள்ளி போட்டு பொதைக்க வந்துருக்கியா”னு வெரட்டி விடுறா மாமியா,மறுமகள. புருசனுக்கு உசுரு இருக்கானு ஊர்ஜிதபடுத்திக்க துடிக்கிது மனசு. கடவுள் சொன்னாலே கேக்காத சமயம் இது மாமியார் வார்த்தை எல்லாம் எந்த மூலைக்கு.

ஒடம்பு இல்லாத ஒரு ஜீவனும்,ஜீவன் இல்லாத ஒரு ஒடம்பும் ஒன்னுக்கொன்னு பாத்து அழுதுகுதுங்க.நீயா நானான்னு போட்டி போட்டி கண்ணீர கொட்டுதுங்க நாலு கண்ணும்.

"சாவ கூட நான் லாயக்கு இல்லேலடி"ன்னு அவன் கேட்டதும் உயிர அறுத்துகிட்டு மாருல அடிச்சிகிட்டு அழுகுறா அவ.அவ கதறுன கதறல்ல தன்னோட இறைய விட்டுட்டு என்னான்னு எட்டி பாக்குது விட்டத்துல ஒரு ராட்சஸ பல்லி.

ஆறு வருஷம் உசுருக்கு உசுரா காதலிச்ச ரெண்டும் ஆறு மாசம் கூட உருப்புடியா வாழல.வாழ தெரியல.வாழ தெரியாமதான வாழ இலையில படுத்து கெடக்கு ஒன்னு.

வீட்ட விட்டு ஓடியே வந்திருந்தாலும் ஒன்னு விடாம எல்லாமே இருந்திச்சி அங்க.தண்ணி தெளிச்சே விட்டாலும் தாய் வீட்டு சீதனம் வராம போய்டுமா?

அன்பு,ஆசை,பாசம்,காதல் கூட இருந்திச்சி ஆனா எதும் நீடிக்கல.சம்பளம் வரும்போது கூடவே சண்டையும் வந்துச்சு.அப்புறம் அடிக்கடி வந்துச்சு. சிரிப்புல ஆரமிச்சு,சினுங்கள்ள ஆரமிச்சு முடியிற சண்டை சாவுகிட்ட வந்து முடியும்னு யாரும் எதிர்பாக்கல.வாழ வழி இல்லாதவங்க கூட வாழ்ந்துடுறாங்க.வாழ புடிக்காதவங்க தான் உயிர விட்டுடுறாங்க.

இப்போ மருந்து மாத்திரையோடு காலமும் சேந்து ஆத்திகிட்டு இருக்கு காய்த்த. மறுபிறவியிலும் நீயே எனக்கு பொண்டாட்டிய வரணும்னு கல்யாணம் ஆன புதுசுல அவன் சொன்னது இந்த ஜென்மத்திலேயே 
நடந்திரிச்சு.

எதோ கடலை மிட்டாய் கம்பேனில வேலை செய்றேன்னு சொல்லுவா.வாக்குவாதம்,விவாதம் எதுமே இப்போ இல்ல.பேசுற நாலு அஞ்சு வார்த்தைல இதுக்கெல்லாம் எடம் எது?

காலம் பூரா நான் உன்ன வச்சி காஞ்சி ஊத்துரன்னு அவன் எப்பயோ அவகிட்ட சொன்னத நெனச்சி பாத்து அப்போ அப்போ அழுதுப்பான்.

ஆறு மாசம் புடிச்சிரிச்சு யாரையும் புடிக்காம எந்திரிச்சி நடக்க.தைரியத்தோட நடக்க ஆரமிச்சிட்டான் கடை கடையாய் ஏறி வேலை தேடி.சர்க்காரே வேலை தர தயங்குற ஒடம்புக்கு சாமானியன் எல்லாம் எப்புடி வேலை  தருவான்.

ஆனா சாவு தந்திரிச்சு வாழுற தைரியத்த. எப்புடியாவது வாழ்ந்து காட்டனுங்கர வைராக்கியத்துல வேகாத வெயிலும் தெரியல வெந்து போன தடமும் தெரியல.

கெடச்சிது வேலை ஒரு ஜெராக்ஸ் கடையில.வேலை,சம்பளம் ரெண்டுமே கம்மிதான். அது அப்போ அவனுக்கு நிறைவா இருந்திச்சி.வாழ்ந்ததா போதும்னு வாழுரவங்களுக்கு சம்பளமே ஒரு பட்டு குஞ்சலம் தான.

எங்க போற என்ன பண்ற எதுமே கேக்கல பொண்டாட்டி.கொஞ்ச நேரம் பேசாம இருன்னு ஏங்குன மனசு இப்போ கொஞ்சமாச்சும் பேசுன்னு ஏங்கி தவிக்கிது. தொண்டைகுழில தயாரா நிக்கிற வார்த்தைங்க எல்லாம் தாண்டி வர தடுமாறுது.

பாவம் பார்வை,பரிதவிக்கிது.கண்ணீரில்லாம அழுகுது கண்ணு.நேருக்கு நேரா பார்க்க தைரியம் இல்ல ரெண்டுத்துக்கும்.பொம்பள கோவத்துக்கு முன்னாடி ஆம்பள ரோஷம் தோத்துப்போகுது இங்க.

வெடிச்சி அழுவுறான் அவ கால கட்டிக்கிட்டு.இத்தன மாசம் பொத்தி வச்ச வார்த்தை,வலி எல்லாம் வெளில வருது வெள்ளந்தியா.அவன் சொல்ற வார்த்தை எல்லாம் அவ காதுக்கு போய் சேருதா இல்லையான்னு எல்லாம் அவன் கண்டுக்கல.சேரணும்னு அவசியம் கூட இல்ல.

ஆறு வருஷத்துக்கு முன்னாடி அவ மனசுல உள்ள காதல அவன் சொன்னப்ப உள்ள சந்தோஷம் திரும்ப வந்து நிக்கிது உள்ளுக்குள்ள.

"என்கிட்ட பேசாதடா நீ.போடா நாயே.."னு அழுகுது அந்த பொம்பள உசுரு.” நீ சாவ கூட லாயக்கு இல்லாதது நல்லது தாண்டா”ன்னு கட்டி அணச்சிகிட்டு அழுகுது அவ தேகம். கண்ணீரோட சந்தோஷமும் வழிஞ்சி ஓடுது நாலு கன்னத்துலயும்..


எங்கேயோ ஒரு மூலையில ஏதோ ஒரு விட்டதுல தன்னோட இறைய விட்டுட்டு என்னான்னு ஒரு ராட்சஸ பல்லி இத எட்டி பாத்துகிட்டு இருக்கும் போல.