Thursday, June 27, 2013

ஒரு ராட்சஸ பல்லி

"அய்யோ..என் மகன கொண்டுபோய் இப்புடி நடபொணமா போட்டுட்டாளே.நீ பாழ்மனையா போய்டுவடி.நாசமா போய்டுவடி.புழுத்துப்போய் தாண்டி செத்து போவ.அய்யோ அய்யோ"னு மாருல  அடிச்சிக்கிட்டு அழுவுறா ஆத்தாகாரி.

பொறடி பொசுங்கன வாட பொரட்டுது வயிர.ஒடம்பு எரிஞ்சி பிளாஸ்டிக்கா வெந்து கெடக்குது வாழை எலையில.எமனே எரக்கப்பட்டு எரஞ்சிட்டு  போய்ட்டான் போல.

மறுபடியும் எந்த சாமிட்டயோ உசுர இரவல் வாங்கி வந்து கண்ண தொறந்து பாத்தான்.கண்ணோட சேத்து கண்ணுத்தண்ணியையும் தொறந்திருப்பான் போல.எரிஞ்சி முடிச்ச அப்பறம் அனைக்கிது கண்ணீரு.

எரியுதுன்னு அழுதானா இல்ல ஏன்முழுசா எரியலன்னு அழுதானானு அங்க உள்ள  யாருக்கும் புடிபடல.

கண்ணு தொறந்த கணவன பாக்க தவிக்கிது உசுரு.“நீ பக்கத்ல வராதடி.எரிஞ்சும் சாகலன்னு இப்போ அள்ளி போட்டு பொதைக்க வந்துருக்கியா”னு வெரட்டி விடுறா மாமியா,மறுமகள. புருசனுக்கு உசுரு இருக்கானு ஊர்ஜிதபடுத்திக்க துடிக்கிது மனசு. கடவுள் சொன்னாலே கேக்காத சமயம் இது மாமியார் வார்த்தை எல்லாம் எந்த மூலைக்கு.

ஒடம்பு இல்லாத ஒரு ஜீவனும்,ஜீவன் இல்லாத ஒரு ஒடம்பும் ஒன்னுக்கொன்னு பாத்து அழுதுகுதுங்க.நீயா நானான்னு போட்டி போட்டி கண்ணீர கொட்டுதுங்க நாலு கண்ணும்.

"சாவ கூட நான் லாயக்கு இல்லேலடி"ன்னு அவன் கேட்டதும் உயிர அறுத்துகிட்டு மாருல அடிச்சிகிட்டு அழுகுறா அவ.அவ கதறுன கதறல்ல தன்னோட இறைய விட்டுட்டு என்னான்னு எட்டி பாக்குது விட்டத்துல ஒரு ராட்சஸ பல்லி.

ஆறு வருஷம் உசுருக்கு உசுரா காதலிச்ச ரெண்டும் ஆறு மாசம் கூட உருப்புடியா வாழல.வாழ தெரியல.வாழ தெரியாமதான வாழ இலையில படுத்து கெடக்கு ஒன்னு.

வீட்ட விட்டு ஓடியே வந்திருந்தாலும் ஒன்னு விடாம எல்லாமே இருந்திச்சி அங்க.தண்ணி தெளிச்சே விட்டாலும் தாய் வீட்டு சீதனம் வராம போய்டுமா?

அன்பு,ஆசை,பாசம்,காதல் கூட இருந்திச்சி ஆனா எதும் நீடிக்கல.சம்பளம் வரும்போது கூடவே சண்டையும் வந்துச்சு.அப்புறம் அடிக்கடி வந்துச்சு. சிரிப்புல ஆரமிச்சு,சினுங்கள்ள ஆரமிச்சு முடியிற சண்டை சாவுகிட்ட வந்து முடியும்னு யாரும் எதிர்பாக்கல.வாழ வழி இல்லாதவங்க கூட வாழ்ந்துடுறாங்க.வாழ புடிக்காதவங்க தான் உயிர விட்டுடுறாங்க.

இப்போ மருந்து மாத்திரையோடு காலமும் சேந்து ஆத்திகிட்டு இருக்கு காய்த்த. மறுபிறவியிலும் நீயே எனக்கு பொண்டாட்டிய வரணும்னு கல்யாணம் ஆன புதுசுல அவன் சொன்னது இந்த ஜென்மத்திலேயே 
நடந்திரிச்சு.

எதோ கடலை மிட்டாய் கம்பேனில வேலை செய்றேன்னு சொல்லுவா.வாக்குவாதம்,விவாதம் எதுமே இப்போ இல்ல.பேசுற நாலு அஞ்சு வார்த்தைல இதுக்கெல்லாம் எடம் எது?

காலம் பூரா நான் உன்ன வச்சி காஞ்சி ஊத்துரன்னு அவன் எப்பயோ அவகிட்ட சொன்னத நெனச்சி பாத்து அப்போ அப்போ அழுதுப்பான்.

ஆறு மாசம் புடிச்சிரிச்சு யாரையும் புடிக்காம எந்திரிச்சி நடக்க.தைரியத்தோட நடக்க ஆரமிச்சிட்டான் கடை கடையாய் ஏறி வேலை தேடி.சர்க்காரே வேலை தர தயங்குற ஒடம்புக்கு சாமானியன் எல்லாம் எப்புடி வேலை  தருவான்.

ஆனா சாவு தந்திரிச்சு வாழுற தைரியத்த. எப்புடியாவது வாழ்ந்து காட்டனுங்கர வைராக்கியத்துல வேகாத வெயிலும் தெரியல வெந்து போன தடமும் தெரியல.

கெடச்சிது வேலை ஒரு ஜெராக்ஸ் கடையில.வேலை,சம்பளம் ரெண்டுமே கம்மிதான். அது அப்போ அவனுக்கு நிறைவா இருந்திச்சி.வாழ்ந்ததா போதும்னு வாழுரவங்களுக்கு சம்பளமே ஒரு பட்டு குஞ்சலம் தான.

எங்க போற என்ன பண்ற எதுமே கேக்கல பொண்டாட்டி.கொஞ்ச நேரம் பேசாம இருன்னு ஏங்குன மனசு இப்போ கொஞ்சமாச்சும் பேசுன்னு ஏங்கி தவிக்கிது. தொண்டைகுழில தயாரா நிக்கிற வார்த்தைங்க எல்லாம் தாண்டி வர தடுமாறுது.

பாவம் பார்வை,பரிதவிக்கிது.கண்ணீரில்லாம அழுகுது கண்ணு.நேருக்கு நேரா பார்க்க தைரியம் இல்ல ரெண்டுத்துக்கும்.பொம்பள கோவத்துக்கு முன்னாடி ஆம்பள ரோஷம் தோத்துப்போகுது இங்க.

வெடிச்சி அழுவுறான் அவ கால கட்டிக்கிட்டு.இத்தன மாசம் பொத்தி வச்ச வார்த்தை,வலி எல்லாம் வெளில வருது வெள்ளந்தியா.அவன் சொல்ற வார்த்தை எல்லாம் அவ காதுக்கு போய் சேருதா இல்லையான்னு எல்லாம் அவன் கண்டுக்கல.சேரணும்னு அவசியம் கூட இல்ல.

ஆறு வருஷத்துக்கு முன்னாடி அவ மனசுல உள்ள காதல அவன் சொன்னப்ப உள்ள சந்தோஷம் திரும்ப வந்து நிக்கிது உள்ளுக்குள்ள.

"என்கிட்ட பேசாதடா நீ.போடா நாயே.."னு அழுகுது அந்த பொம்பள உசுரு.” நீ சாவ கூட லாயக்கு இல்லாதது நல்லது தாண்டா”ன்னு கட்டி அணச்சிகிட்டு அழுகுது அவ தேகம். கண்ணீரோட சந்தோஷமும் வழிஞ்சி ஓடுது நாலு கன்னத்துலயும்..


எங்கேயோ ஒரு மூலையில ஏதோ ஒரு விட்டதுல தன்னோட இறைய விட்டுட்டு என்னான்னு ஒரு ராட்சஸ பல்லி இத எட்டி பாத்துகிட்டு இருக்கும் போல.

2 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. nice one.. i loved these lines..வாழ வழி இல்லாதவங்க கூட வாழ்ந்துடுறாங்க.வாழ புடிக்காதவங்க தான் உயிர விட்டுடுறாங்க.
    மறுபிறவியிலும் நீயே எனக்கு பொண்டாட்டிய வரணும்னு கல்யாணம் ஆன புதுசுல அவன் சொன்னது இந்த ஜென்மத்திலேயே
    நடந்திரிச்சு.
    வாழ்ந்ததா போதும்னு வாழுரவங்களுக்கு சம்பளமே ஒரு பட்டு குஞ்சலம் தான.
    தொண்டைகுழில தயாரா நிக்கிற வார்த்தைங்க எல்லாம் தாண்டி வர தடுமாறுது.

    ReplyDelete