Wednesday, June 19, 2013

கலர் கண்ணாடி..

     நாளுக்கு நாள் குறைந்து இன்று நாளையாகி நிற்கிறது அந்த நாள்.இந்த இரவை கடந்தால் நாளைய விடியல் விழாக்கோலத்தோடு விடியும்.

சந்தோஷம்,எதிர்பார்ப்பு என எல்லாவற்றையும் சுமந்துக்கொண்டு உறங்குது ஊர்.ஊரே எழுந்த பின் ஒய்யாரமாக எழுந்திரிக்கின்றது சூரியன். "இனி நான் கூவி என்ன பயன்" என்று சலித்துக்கொண்டே கூவுகிறது கூரைமேல உள்ள ஒரு கொழுத்த சேவல்.

விறகின் வெப்பத்தில் காலை குளிருக்கு இதமாய் குளிர் காய்ந்து கொண்டிருக்கின்றது பித்தளை குடமும் அதில் உள்ள பாதி தண்ணீரும்.
வெந்நீரை விலாவி பதம்பார்த்து ராசுக்குட்டியை குளிப்பாட்டி தானும் குளித்து தயாராகிவிட்டாள் திருவிழாவிற்கு.கட்டம்போட்ட சட்டையும் கருஞ்சிவப்பு கால்சட்டையுமாய் கணக்கட்சிதமாய் கிளம்பி நிற்கிறான் ராசுக்குட்டி.

ஈரத்தலையோடு உச்சி வகுடெடுத்து,மணிபர்சை மாராப்பில் மறைத்துகொண்டு,உயிரோடு தான் இருப்பார் என்கிற நம்பிக்கையில் நெற்றிப்பொட்டில் பொட்டையும்,வகுடின் வேரில் குங்குமத்தையும் வைத்துகொண்டு பொடிநடையாக கிளம்பிவிட்டாள் ராசுக்குட்டியை அழைத்துக்கொண்டு.

ஏதேதோ புரியாத கனவுகளை சுமந்துக்கொண்டு நடந்துக்கொண்டிருக்கிறான் ராசுக்குட்டி.புள்ளைக்கு கால் வலிக்கும் என்று அவன் கனவோடு அவனையும் சேர்த்து நடக்கிறாள் கோவிலை நோக்கி.

தொலைதூரத்தில்,அந்த கோவில் கோபுரத்தை கண்டதுமே கடவுளையே கண்டதுபோல் சந்தோஷமானான் ராசுக்குட்டி.

கடவுளை பார்த்தால் மட்டுமே சந்தோஷபட வேண்டும் என்று கட்டாயமா என்ன..?

கோவில் வாசலை வந்து அடைந்துவிட்டனர்.மனிதர்கள் மேல் நம்பிக்கை இல்லாமல் அந்த கடவுள் மேலும் நம்பிககை இல்லாமல் செருப்பை தனி தனியாகி கழற்றிபோட்டு நடந்துசென்றாள் தலைநிமிர்ந்து.கடவுள் மனிதர்களை தான் காப்பாற்றுவார் செருப்பை மனிதர்கள் தான் காப்பாற்றவேண்டும் என்று முனுமுனுத்துக்கொண்டே.

கண்கள் திரும்பும் இடமெல்லாம் கடைகளாக எழுந்து நிற்கின்றன.கலர் கண்ணாடி பளிச்சென்று ராசுக்குட்டி கண்ணில் வந்து விழுந்துவிட்டது."அம்மா கண்ணாடி மா" என்று கேட்டு முடிப்பதற்குள் "சாமி கும்புட்டுட்டு வாங்கிக்கலாம்டா கண்ணு" என்று சொல்லி சம்மதிக்க வைப்பதிற்குள் சன்னதியே வந்துவிட்டது.

மலர் மாலைகளுக்கு நடுவே கம்பீரமாய் கண்முன் காட்சி அளிக்கிறார் கடவுள்.என்ன பயன்.?நாம்தான் கண்களை மூடிகொள்கிறோமே கடவுளை கும்பிடும்பொழுது.கண்கள் மூடி கும்பிடும்போது கூட கடவுள் தெரியவில்லை,கலர் கண்ணாடிதான் தெரிகிறது  ராசுக்குட்டிக்கு.

கண்ணாடி வாங்கி தரனும் என்று சேயும் கணவனை திரும்ப பெறனும் என்று தாயும் கண்களை இருக்க மூடி வேண்டிகொள்கின்றனர்.

சின்ன ராட்டினம்,பெரிய ராட்டினம் என வகை வகையாக வகைபடுத்தபட்டு நிற்கிறது வா வா என்று.மரவல்லிகெழங்கு சிப்ஸ் கடை மணத்து கெடக்கு வழியில்.எதை எடுத்தாலும் 10 ருபாய்  என்று 25 ருபாய் ஸ்லேட்டில் எழுதி தொங்கவிடபட்டிருந்தது ஒரு கடையில்.

ஏழ்மை இழுத்துது சென்றது 10 ருபாய் மட்டும் என்ற வார்த்தையை பார்த்ததும்.பேனா கத்தி,தேங்காய் துருவி எல்லாம் வாங்கிக்கொண்டு கவனமாய் பிளாஸ்டிக் பையில் போட்டுக்கொண்டு திரும்புகையில் தொலைத்திருந்தாள் தன் மகனை."என் கடவுளே..ராசுக்குட்டி.."

பாவம்.
அவளுக்கு தெரியாது கடத்தி சென்றதே அவனின் கடவுள் தான் என்று.
ஆம்.அதே கலர் கண்ணாடி தான்.
கண்ணாடி இருக்கிறதா விற்றுவிட்டதா என்ற பயத்தில் ஓடி சென்று ஒருமுறை பார்த்துவிடலாம் என்ற நினைப்பில் ஓடியதில் விடிந்தது தேடலின் அத்தியாயம்.
கண்ணாடி இருந்தது அனால் திரும்பி வந்து பார்க்கையில் அங்கு அவன் அம்மா தான் இல்லை.

பதறுது மனம்.
படருது பயம்.
அம்மான்னு அழுகுது சுவாசம்.
கண்ட இடமெல்லாம் தானாய் ஓடுது கால்.
பரிணாம வளர்ச்சிபெற்று விசும்பலாக மாறி நிக்குது கண்ணீரு.

கலர் கண்ணாடி,பஞ்சு மிட்டாய்,பலூன்,சோப்பு முட்டை எல்லாம் கண் முன்னே நிற்கிறது.ஆனால் எதுவுமே கண்ணில் நிற்கவில்லை.
அம்மா அம்மா என்பதோடு அழுகையும் சேர்த்து உச்சரித்துக்கொண்டே அலைகிறான் நாதியின்றி.நாதிதேடி.

இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே.பாரதி வரிகள் பலிக்காமல் போய்விடுமா என்ன.!
"அறிவிப்பு:ராசுக்குட்டி என்கிற 6 வயது சிறுவனை தொலைத்த சிவகாமி என்கிற தாய் எங்கிருந்தாலும் உடனே கிழக்கு கோபுர வாசலுக்கு வருமாறு கேட்டுகொள்கிறோம்."
கடவுள் இம்முறை வரத்தை காதில் கொடுத்திருக்கிறார் போல.

கண்ணீரை சேலை முந்தானையில் துடைத்துக்கொண்டு செய்தி சொன்ன அந்த ஸ்பீக்கருக்கு கையெடுத்து கும்பிடு போட்டு விறு விறு என்று சென்றடைந்தாள் கிழக்கு கோபுர வாசலுக்கு.

கிழக்கில் ஒரு மேஜை மேல் அழுதுகொண்டு உட்காந்திருந்தது அவள் சூரியன்.ஓடிசென்று மாரோடு அணைத்துக்கொண்டு அழுகிறாள்.முடி,முகம் என்று பரஸ்பர முத்தம் பரிமாரபடுகிறது எந்த பாரபட்சமின்றி.சந்தோஷம் மகிழ்ச்சி என்று எல்லாவற்றையும் தாண்டி இன்னும் பெயர் வைக்காத ஒரு உணர்வு அங்கு உரையாடப்படுகிறது.

அம்மா என்ற வார்த்தையும்,ராசுக்குட்டி என்ற வார்த்தையும் இன்னும் கண்ணீரிலையே மிதந்து வருகிறது.இந்த ஆனந்த கண்ணீரும் உப்பாய் இருக்குமா என்ன? இதையெல்லாம் ஆராய்வதற்கோ அறிந்துகொள்வதற்கோ அந்த இருவருக்குமே விருப்பமில்லை இப்பொழுது.

நன்றி சொல்லி நடையை கட்டினாள் வீட்டிற்கு,ராசுக்குட்டியுடன்.அவன் ஆசைப்பட்டு கேட்ட அந்த கலர்கண்ணாடி அவனுக்கு கடைசியாக கிடைத்துவிட்டது.ஆனால் அது வெறும் கலர் கண்ணாடியாகவே அவன் கண்ணில் இப்பொழுது கிடக்கிறது.


கலர் கண்ணாடியால் எல்லா சமயங்களிலும் கடவுளாக இருக்க  முடிவதில்லையே..

1 comment: